மும்பையில் கடந்த 3-ம் தேதி துவங்கி, தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று (ஏப்ரல் 5) நிறைவடைந்தது.
இந்த முறையும், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடர்கிறது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதனால், ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.
ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,
“ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி, 6.50% -மாகவே தொடரும்
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பு, 7%- ல் தக்க வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின், 7.60 சதவீத வளர்ச்சிக் கணிப்பைக் காட்டிலும் குறைவாகும்
கடந்த நிதியாண்டில், 5.40 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் நடப்பு நிதியாண்டில், 4.50 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
பணவீக்கம் 4.5 சதவீதம் என்றளவில் நிலவுகிறது. நிதி நிலைமைகள் சாதகமாக இருக்கின்றன. அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச்சில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி சூழலுக்கு ஏற்ப வளைந்துகொடுத்து நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறது. அதேவேளையில் பணச் சந்தையின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பொருத்தமான உத்திகளை நிச்சயமாகப் பயன்படுத்தும். இவற்றின் அடிப்படையில் ரெப்போ விகிதம் மாற்றப்படவில்லை.
உணவுப் பொருட்கள் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை பணவீக்கத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும்
யு.பி.ஐ., செயலி வாயிலாக வங்கிகளில் பணம் டிபாசிட் செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
அரசு கடன் பத்திரங்களில், சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய, ரிசர்வ் வங்கி பிரத்யேகமாக ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
ஐ.எப்.எஸ்.சி., என்னும் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்திலும், தங்க கடன் பத்திரங்கள் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது
வங்கி சாரா நிதி நிறுவனங்களும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணய ‘வாலட்’களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
பி.பி.ஐ., என்னும் ப்ரீபெய்டு பேமென்ட் வாலட்களிலிருந்து வேறொரு யு.பி.ஐ., செயலி வாயிலாகவும் பேமென்ட்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். தற்போதைய நடைமுறையில் சம்பந்தப்பட்ட பி.பி.ஐ.,களிலிருந்து மட்டுமே பேமென்ட் மேற்கொள்ள முடியும்
வங்கிகள் பணப்புழக்க ரிஸ்க்குகளை சிறப்பாக கையாள, எல்.சி.ஆர்., நடைமுறையில், ரிசர்வ் வங்கி மாற்றத்தை கொண்டு வரவுள்ளது.
கிராமப்புறங்களிலும் தேவை அதிகரித்து வருவது, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்
ராபி பருவத்தில், சிறப்பான கோதுமை விதைப்பு மற்றும் பருவமழை வழக்கம் போல இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால், காரீப் பருவ விதைப்பு சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது
வலுவான கிராமப்புற தேவை, குறைந்து வரும் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் தயாரிப்பு மற்றும் சேவைத் துறை ஆகியவற்றால் தனியார் நுகர்வு அதிகரிக்கும்.
எனினும், பதற்றமான புவிசார் அரசியல் சூழல் மற்றும் உலகளவில் வர்த்தக போக்குவரத்து பாதிக்கப்படுவது ஆகியவை, நாட்டின் பொருளாதாரத்துக்கு சவாலான சூழலை ஏற்படுத்துகின்றன
கடந்த நிதியாண்டின் வலுவான பொருளாதார வளர்ச்சியும்; நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்புகளும், ரிசர்வ் வங்கியை விலை நிலைத்தன்மையில் கவனம் செலுத்த வழிவகை செய்கிறது
அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த நிதியாண்டில் 3.45 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். கடந்த 2014 – 15 நிதியாண்டுக்கு பின், இதுவே அதிகபட்சமாகும்
தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில், உலகளவில் இந்தியர்களே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.
நடப்பு நிதியாண்டுக்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை, சமாளிக்கக் கூடிய நிலையிலேயே இருக்கும்
கடந்த நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு, மற்ற பிற வளர்ந்து வரும் நாடுகளுடனும், சில வளர்ந்த நாடுகளுடனும் ஒப்பிடுகையில், குறிப்பிட்ட வரம்புக்குள்ளான அளவில் ஏற்ற இறக்கங்களைக் கண்டது
கடந்த நிதியாண்டில், முக்கிய நாணயங்களில் இந்திய ரூபாய் தான் மிகவும் நிலையாக இருந்தது
அடுத்த பணக் கொள்கைக் குழு கூட்டம், வரும் ஜூன் மாதம் 5 முதல் 7ம் தேதி வரை நடைபெறும்.
முதலீட்டுக்கு மொபைல் செயலி
அரசின் கடன் பத்திரங்கள், தங்க பத்திரங்கள் ஆகியவற்றில், சில்லரை முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது தான், சில்லரை முதலீட்டாளர்களுக்கான நேரடி முதலீடு திட்டம். இது, முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியில் கணக்கு துவங்கி, அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவும்; இந்த பத்திரங்களை பங்குச் சந்தைகளில் வாங்கி, விற்கவும் அனுமதிக்கிறது.
தற்போதைய நடைமுறையில், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில், ‘லாக் இன்’ செய்த பிறகே, இதுபோன்ற கடன் பத்திரங்களில் சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீடு நடைமுறையை எளிதாக்கும் நோக்கில், விரைவில் மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்படும்.
இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த பணக் கொள்கை கூட்டத்தில், பணவீக்கமே மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு பிறகு அந்த பிரச்னை சற்றே குறைந்துள்ளது. எனினும், அரசு நிர்ணயித்துள்ள பணவீக்க உச்ச வரம்பான 4 சதவீதத்துக்குள் பணவீக்கத்தை கொண்டு வருவதே ரிசர்வ் வங்கியின் இலக்கு. தற்போது நாங்கள் அதில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்.”
என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.