மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் லோகநாதன் முருகன் இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் முருகன், தம்மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி அரசின் கொள்கைகளை வெளியிடுவதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுவதாக அவர் மேலும் கூறினார்.
ஏழைகள் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த டாக்டர் முருகன், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3 கோடி ஊரக மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை முடிவு இதற்கு உதாரணம் என்று குறிப்பிட்டார். அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜூ, அமைச்சகம் மற்றும் ஊடகப் பிரிவுகளைச் சேர்ந்த இதர உயர் அதிகாரிகள் டாக்டர் முருகனை வரவேற்றனர்.