உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ்வில் அருகே ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் இன்று காலை டெல்லி நோக்கிச் சென்ற டபுள் டக்கர் பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, பாங்கர்மாவில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து சம்பவம் குறித்து உன்னனோ மாவட்ட மாஜிஸ்திரேட் கவுரங் ரதி கூறுகையில், “இன்று அதிகாலை 5.15 மணியளவில் பீகார் மாநிலம் மோதிஹாரியில் இருந்து வந்த தனியார் பேருந்து பால் டேங்கர் மீது மோதியது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்து அதிவேகமாக சென்றது போல் தெரிகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறினார்.
மேலும், இந்த விபத்து சம்பவத்திற்கு உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” உன்னாவ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது மிகவும் வருத்தமும், மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். ஸ்ரீராமரின் காலடியில் சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.