தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை. இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் என்று புறநானூற்று பாடல் கூறுகிறது.
நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில்,” தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று குறித்தார். சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது.
சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விஜயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.
பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்தி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.
மதுரையின் பெருமைகள்:
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
சிவபெருமானுக்கு & அம்பாளுக்கும் பட்டாபிசேகம் இங்கு மட்டுமே செய்யப்படுகிறது,
ஆறுபடை வீட்டில் மதுரை திருப்பரங்குன்றம் முருகனுக்கு மட்டுமே பட்டாபிசேகம் செய்யப்படுகிறது,
இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கடம்ப வனத்தை அளித்து இக்கோவிலை கட்டினார்.
சித்திரைத் திருவிழா
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
திருவிழா நகரம்
மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கும். இதில் முக்கியமான திருவிழாக்கள் வண்டியுர் மாரியம்மன் தெப்ப திருவிழா ,திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆவாணி திருவிழா ஆகியவை அடங்கும்
சுற்றுலா தலங்கள்:
மதுரையில் திருமலை நாயக்கர் மஹால், ஆயிரம் கால் மண்டபம் (ஒரு தூண் இசை மிகுந்தது என்று கூறப்படுகிறது) , அழகர்கோயில், பழமுதிர்சோலை, யானைமலை, காந்தி மியூசியம் போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன.
ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு)
மதுரையில் ஆண்டுத்தோறும் நடைபெறும் அலங்கங்நல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. மேலும், மதுரையை சுற்றியுள்ள ஊர்களிலும் பொங்கல் பண்டிக்கையின் போது மிகச்சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும்.
சிறப்பு மிக்க மாநகரம் – மதுரை
108 திவ்ய தேசத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டுமே நவக்கிரகங்கள் உள்ளது,
பஞ்ச பூத தலங்கள் மதுரை மாநகரிலேயே உள்ளது,
சிவபெருமானுக்கு மனித உருவம் மதுரையில் இரண்டு இடத்தில் உள்ளது அவை, திருப்பரங்குன்றம் & இம்மையில் நன்மை தருவார் ஆகிய திருத்தலங்கள் ஆகும்.
சுதந்திர பெற்ற பின் மாநகராட்சி ஆனது மதுரை தான்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் மட்டும் உள்ளது,
ஆதீன மடம் முதல் முதலில் உருவானது மதுரையில் தான்,
சொக்கநாதர், கள்ளழகர் கிட்ட மட்டும் தான் இடுப்பில் கத்தி இருக்கும் வேறு எந்த சிவபெருமானிடமும், பெருமாளிடமும் இருக்காது,
ஒரே ஊரில் இரண்டு கலெக்டர் அலுவலகம் இருந்தது மதுரையில் தான் (மதுரை & இராமநாதபுரம்).
மாணிக்கவாசகர் பிறந்தது மதுரை திருவாதவூர் ஆகும்.
278 தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் 3 மதுரையில் உள்ளது,
மகாகவி சுப்ரமணிய பாரதியார் மதுரை சேதுபதி பள்ளியில் பணிபுரிந்தார்,
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படித்தது மதுரை திருநகர் முக்குலத்தோர் பள்ளி & மதுரை யூனியன் கிறிஸ்டியன் பள்ளி.
ரமண மகரிஷி படித்தது மதுரை ஸ்காட் பள்ளி,
போதிசேனா மதுரையில் பிறந்த போதிதர்மர் போல புத்த மதத்தை சீனா & ஜப்பானில் பரப்பினார்.
சாம்ராஜ்யங்கள் பல மாற்றினாலும் தலைநகராக மதுரையே இருந்துள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த ஒரு ஊரும் இப்படி இருந்தது இல்லை.
மதுரையில் இரண்டு முறை திருத்தாண்டவம் ஆடி உள்ளார் நடராசர் & வலது கால் மாற்றி ஆடியதும் இங்கு மட்டுமே
மதுரை பிறக்க, வாழ, இறக்க, தரிசிக்க, நினைக்க, கேட்க, சொல்ல முக்தி தரும் திருத்தலம்.
சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் என இந்து மதத்தின் நான்கு பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் தந்த ஊர் மதுரை.
மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு, அவை:
- மல்லிகை மாநகர்
- கூடல் நகர்
- மதுரையம்பதி
- கிழக்கின் ஏதென்ஸ்
- நான் மாடக்கூடல்
- மீனாட்சி பட்டணம்
- உயர் மாதர்கூடல்
- ஆலவாய்
- கடம்பவனம்
- அங்கண் மூதூர்
- தூங்கா நகரம்
- கோவில் நகரம்
- பூலோக கயிலாயம்