Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..ரசிகர்கள் கண்ணீர்

நடிகர் டேனியல் பாலாஜி

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) மாரடைப்பால் காலமானார்.வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி காலமானார்.

நெருப்பு கண்களுடன், வில்லத்தன பார்வை மற்றும் பயமுறுத்தும் சிரிப்பை கொண்டு வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டியவர் டேனியல் பாலாஜி.
தெனாவெட்டான முகபாவம், வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்வற்றில் ஒரு தன்னிச்சையான வசீகரம்… இதெல்லாம்தான் டேனியல் பாலாஜி.
வேட்டையாடு விளையாடு படத்தில் ஆங்கிலம் கலந்து ஒரு நக்கலான தோரணையில் கமல்ஹாசனை மிரட்டும் காட்சியில் டேனியல் பாலாஜியின் நடிப்புத்திறன் அவ்வளவு அபாரமானதாக இருக்கும். சமீபத்தில்கூட ஒரு இண்டர்வியூவில் அந்த டயலாக்கை அவர் பேச, அதை ரசிகர்கள் அதே ஆச்சர்யத்தோடு பகிர்ந்துவந்தனர்.
அதையும் தாண்டி காக்க காக்க திரைப்படத்தில் “நாங்க 4 பேரு எங்களுக்கு பயமில்ல” என சொல்லும் சூர்யாவின் போலீஸ் நண்பர்கள் கும்பலில் ஸ்ரீகாந்த் கேரக்டராகவும், பொல்லாதவன் திரைப்படத்தில் தன்னுடைய பகைக்காக அண்ணனையே கொல்லும் தம்பி ரவியாகவும், வடசென்னை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களுக்கு விருப்பமான ஒரு வில்லன் நடிகராக டேனியல் பாலாஜி மாறியிருந்தார். ராதிகா நடிப்பில் வெளியான சித்தி தொடர்தான், டேனியல் பாலாஜியை முதன்முதலில் கேமராமுன் நிறுத்தியது.
சமீபத்தில் விஜய்யின் பைரவா, பிகில் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார் பாலாஜி. அடுத்ததாக வெற்றிமாறனின் வடசென்னை 2-விலும் முக்கிய ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத தலை சிறந்த வில்லனாக டேனியல் பாலாஜி விளங்கி வந்தார்.

முதன் முதலில் சித்தி நாடகத்தில் அறிமுகமான டேனியல் பாலாஜி படிப்படியாக சினிமாவில் வளர தொடங்கினார். இவர் நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் ஆவார்.

சென்னையில் உள்ள தரமணி திரைப்பட நிறுவனத்தில் தனது இயக்க படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்ஷன் மேனேஜராக தனது பயணத்தை தொடங்கினார். சின்னத்திரையில் வெளியான ராதிகாவின் சித்தி தொடரில் இவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் கிடைத்தது அதில் இவருடைய பெயர் டேனியல். அதற்குப் பிறகு இவருடைய பெயர் டேனியல் பாலாஜி என மாறியது.

ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் டேனியல் பாலாஜி அறிமுகமானார். அதற்குப் பிறகு காதல் கொண்டேன் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்தார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடிப்பு அசுரனாக விளங்கி வரும் கமல்ஹாசனை மிரட்டும் அளவிற்கு டேனியல் பாலாஜி நடித்திருப்பார்.
அந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. அதற்குப் பிறகு பல படங்களில் இவர் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி கண்டார்.
வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்தில் மெயின் வில்லனாக நடித்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரம் கட்டாயமாக ரசிகர் மத்தியில் பேசப்படும் அந்த அளவிற்கு தனது நடிப்பை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.
நடிகர் விஜய்யோடு சேர்ந்து பைரவா பிகில் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். பொல்லாதவன் மற்றும் வேட்டையாடு விளையாடு இந்த இரண்டு திரைப்படங்களிலும் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இவருடைய வசன உச்சரிப்பிற்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இறுதியாக கடந்த ஆண்டு அரியவன் என்ற படத்தில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது பல மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு 48 வயது மட்டுமே ஆகின்றது. டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைவரும் டேனியல் பாலாஜியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

10 இடங்களில் சதமடித்த கோடை வெயில்

Sat Mar 30 , 2024
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. நேற்று, தர்மபுரி, கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய, 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானது. வரும், 1ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும். பகலில் வெயில் தீவிரம் காட்டும் என, சென்னை வானிலை […]
summer-sun

You May Like